தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த மாநிலத்தில் வாழும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவர்களது நிலத்தை முன்னேற்றுவதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப்போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் – என்றார் வள்ளுவப் பெருந்தகை. அத்தகைய உழவர் பெருமக்களின் உள்ளம் மகிழத்தக்க வகையில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் தாக்கல் செய்து வருகிறது. உழவர்கள் வாழ்வும், வேளாண்மைத் துறையும் செழிக்கவும், சீர்பெறவும் ஏற்றமிகு எத்தனையோ திட்டங்களைக் கடந்த ஆண்டு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதனைச் செயல்படுத்திக் காட்டினோம்.

அதன் அடையாளம்தான் தமிழகத்தில் பாசனப் பரப்பு அதிகம் ஆகியுள்ளது. விளைச்சல் அதிகம் ஆகியுள்ளது. உழவர் பெருமக்கள் மகிழ்ச்சியை அடைந்தார்கள். அத்தகைய மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்றைய நாள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். உழவே தலை என்ற உன்னத நோக்கம் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்கி வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிக்கைத் திட்டமிடுதலில் துணைநின்ற துறையின் செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ்-க்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அனைத்துத் துறைகளும் சமமாக வளர வேண்டும்’ என்பதை இந்த அரசின் இலக்காக நான் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். என்றாலும், அனைத்துத் துறைகளையும் விட வேளாண்மைத் துறை என்பது அதிகமாக வளர்ந்தாக வேண்டும். ஏனென்றால், வேளாண்மை என்பது தொழில் மட்டுமல்ல, அது வாழ்க்கை, பண்பாடு தொடர்புடையது ஆகும். உயிர்காக்கும் துறையாகும். மக்களைக் காக்கும் மகத்தான துறையாகும். அதனால்தான் இதற்கென தனிநிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது என திமுக ஆட்சி அமைந்ததும் முடிவெடுத்தோம். அதனை இரண்டாவது ஆண்டாக மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டி இருக்கிறோம்.

தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பது, ஒட்டுமொத்தமாக கிராமங்களை வளர்த்தெடுப்பது, உழவர்களின் வருமானத்தை உயர்த்துவது, மாற்றுப்பயிர்களை அறிமுகம் செய்வது, இயற்கை இடர்பாடுகளில் இருந்து உழவர்களைக் காப்பது, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், பாசன நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, பாசனத்துக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, வேளாண்மைப் பணிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது, சூரிய சக்தியை பயன்படுத்துதல் என பல்வேறு நோக்கம் கொண்டதாக வேளாண்மையை மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வழிகாட்டுகிறது.

வேளாண்மை என்பது கிராமம் சார்ந்தது, மழையை நம்பியது, நிலங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் வேறு வழியில்லாமல் செய்யும் தொழில் என்று இல்லாமல், அதனை நவீனப்படுத்தி, லாபம் தரும் தொழிலாகவும், வாழ்க்கை முறையாகவும் மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை அடித்தளம் அமைத்துள்ளது.

வேளாண் தொழிலை நம்பி வாழும் உழவர் பெருமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. உழவர்களே, உங்களுக்குப் பின்னால் இந்த அரசாங்கம் இருக்கிறது என்ற உந்து சக்தியை இந்த அறிக்கை கொடுத்துள்ளது.

வேளாண்மைக்கு என இந்த ஆண்டு 33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், பயிர்க்காப்பீட்டுத் திட்டம், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் இயக்கம்,சிறுதானிய திருவிழாக்கள், டிஜிட்டல் விவசாயம், ஆதிதிராவிடர் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், கரும்பு விவசாயிகளுக்கு உதவி, உழவர் சந்தைகள் மேம்பாடு, பண்ணைகளை இயந்திரமாக்கல், உணவுப் பதப்படுத்தலுக்கு முன்னுரிமை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளது. உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க 5,157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் கட்டப்பட இருக்கின்றன. உழவர்களுக்கு இடுபொருட்கள் எடுத்துச் செல்ல பஞ்சாயத்துகளுக்குப் பணம் தரப்பட்ட உள்ளது. வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழக உழவர்களுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதை இத்துறை கண்காணிக்க இருக்கிறது.

90 பக்க அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த மாநிலத்தில் வாழும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவர்களது நிலத்தை முன்னேற்றுவதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப் போகிறது. இதன்மூலமாக விளைச்சல் அதிகமாகி, மாநிலத்தின் உற்பத்தி அதிகம் ஆகவே போகிறது. பசுமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, உழவர்களின் மனத்திலும் விளையப் போகிறது.

வான்புகழ் கொண்ட வள்ளுவரின் கனவை நிறைவேற்றும் வகையிலும், வானத்தை நம்பி வாழும் உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது. மண்ணையும் காப்போம். மக்களையும் காப்போம்.
மாநிலத்தை மட்டுமல்ல, இந்த நானிலத்தையும் காப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.