திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில், அவர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காளிவேலம்பட்டியை சேர்ந்த மருதமுத்து, கிரானைட் கம்பெனியில் வாட்ச்மேனாக பணி புரிந்து வந்த நிலையில், இன்று காலை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக கோவை நோக்கி சென்ற பைக் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் மருதமுத்துவும் பைக்கில் வந்த நபரும் தூக்கிவீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மருதமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பைக்கில் வந்த ஹாரிஸ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.