பெங்களூரு: கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகா, ஒய்.என்.எஸ்.கோட்டையில் இருந்து பாவகடாவுக்கு தனியார் பஸ் ஒன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களை ஏற்றிக் கொண்டு நேற்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இடம் கிடைக்காத மாணவர்கள் மற்றும் சில பயணிகள் மேல் கூரை மீது அமர்ந்து பயணம் செய்தனர். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ் மேல் கூரையில் அமர்ந்திருந்தவர்கள் சாலையோரத்தில் இருந்த முட்செடிகள் மீது விழுந்தனர். இதில் பலருக்கு கை, கால்கள் முறிந்தது. மேலும் 8 பேர் பஸ்சுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 35க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.