புதுடெல்லி:
மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமையும் நிலையில், முதலமைச்சர் தேர்வு குறித்த இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
தற்போதைய காபந்து முதலமைச்சர் பிரேன் சிங்கும், அம்மாநில பாஜக சட்டசபை உறுப்பினர் பிஸ்வஜித் சிங்கும் முதலமைச்சர் தேர்வு பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மணிப்பூர் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் இம்பாலில் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநில பாஜக மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் இன்று புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து இம்பாலில் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் பிரேன் சிங்கும், பிஸ்வஜித் சிங் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே, டெல்லி வந்துள்ள பிரேன் சிங், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், மணிப்பூர் பாஜக செயலாளராகத்தான் தாம் தேர்தலில் போட்டியிடதாகவும், முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட வில்லை என்றும் தெரிவித்தார்.
கட்சியின் தேசிய தலைமை, மணிப்பூர் முதலமைச்சர் குறித்து முடிவெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எப்போதும் கட்சியின் நலனுக்காகவே தாம் உழைத்து வருவதாகவும், தொடர்ந்து அதுபோல் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்…
பகவந்த் மான் அமைச்சரவையில் முக்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு இல்லை