பெங்களூரு : அடுத்த சட்டசபை தேர்தலில், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. வாரிசுகளுக்கு டிக்கெட் எதிர்ப்பார்த்த தலைவர்களுக்கு, ஷாக் கொடுத்து உள்ளது.குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஒரே குடும்பத்தினருக்கு, டிக்கெட் தரக்கூடாது என, கட்சி மேலிடத்திடம் அறிவுறுத்தியதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இதன்படி பா.ஜ., மேலிடமும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என, ஆலோசிக்கிறது.அடுத்த சட்டசபை தேர்தலில், தங்களின் வாரிசுகளை களமிறக்க தயாரானவர்கள், கையை பிசைகின்றனர். வாய்ப்பு கிடைக்குமா பா.ஜ.,வில் ஒரு டஜனுக்கும் அதிகமானோர், தங்களின் தந்தை செல்வாக்கை பயன்படுத்தி, டிக்கெட் பெற்று போட்டியிட திரைமறைவில் தயாராகின்றனர். அந்தந்த தொகுதியை சுற்றி வந்து, பிரசாரத்தையும் துவங்கியுள்ளனர்.ஆனால் குடும்ப அரசியலை ஏற்க முடியாது என, பிரதமரே கூறியதால், வாய்ப்பு கிடைக்குமா என்ற பீதியில் உள்ளனர்.கர்நாடகாவில், பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகளில் பெரும்பாலானோர், குடும்ப அரசியலில் உள்ளவர்கள்தான். தற்போது பா.ஜ.,வில், குடும்ப அரசியலுக்கு ‘குட்பை’ கூற முன் வந்துள்ளது. இளம் முகங்கள், கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பளித்தால், கட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என, மேலிடம் ஆலோசிக்கிறது.தேர்தலுக்கு டிக்கெட் அளிக்கும் போது, கர்நாடக பா.ஜ.,வினரின் சிபாரிசுகளை தவிர்த்து, மேலிட தலைவர்கள் தங்களுடைய பாணியில், அறிக்கை பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்து, டிக்கெட் அளிப்பர். இதற்கு முன்பும் கூட, இது போன்று டிக்கெட் கொடுத்த உதாரணம் உள்ளது.தேர்தலுக்கு டிக்கெட் தருவது, அமைச்சரவை விஸ்தரிப்பு என, எந்த விஷயங்களாக இருந்தாலும், தங்களுடைய முடிவே இறுதியானது என, ஏற்கனவே பலமுறை பா.ஜ., மேலிடம் உணர்த்தியுள்ளது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், தெளிவாக உள்ளனர். அடுத்த சட்டசபை தேர்தலில், போட்டியிட விரும்பும் பலருக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது.கர்நாடகாவில் குடும்ப அரசியல் விஷயத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முதலிடத்தில் நிற்பார். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் எம்.பி.,; மற்றொருவர் கட்சியின் மாநில துணை தலைவர். ஜெகதீஷ் ஷெட்டரின் வாரிசுகளும் அரசியலில் உள்ளனர்.உமேஷ் ஜாதவ் எம்.பி.,யாக உள்ளார்.
இவரது மகன் எம்.எல்.ஏ.,; சசிகலா ஜொல்லே அமைச்சர், இவரது கணவர் எம்.பி.,; அமைச்சர் ஈஸ்வரப்பா மகன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்.ஜார்கிஹோளி குடும்பத்தின், நான்கு சகோதரர்களும் எம்.எல்.ஏ.,க்கள். இது போன்று பல தலைவர்கள், குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.’பிரேக்’ விழும் ‘குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும். மற்ற கட்சிகளின் மோசமான குடும்ப அரசியலுக்கு எதிராக போராட வேண்டும். ‘எனவே எந்த தலைவர்களின் பிள்ளைகளுக்கு, டிக்கெட் நிராகரிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு, நானே பொறுப்பேற்கிறேன்’ என, பிரதமர் மோடி கூறியுள்ளதால், வரும் நாட்களில், குடும்ப அரசியலுக்கு ‘பிரேக்’ விழும் வாய்ப்புள்ளது.