உக்ரைன் ஆயுதக் கிடங்கை தகர்த்தது ரஷ்யா; அதிநவீன ஏவுகணைகளால் அதிரடி தாக்குதல்| Dinamalar

மாஸ்கோ-உக்ரைன் – ருமேனியாஎல்லைப் பகுதிக்கு அருகே இருந்த ராணுவ ஆயுத கிடங்கை, அதிநவீன ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.இதற்கிடையே, தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க ஏராளமான உக்ரைன் மக்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதுவரை, 32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை கைவிடும்படி ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவிட்டும், இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், உக்ரைனில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கை தகர்க்க, அதிநவீன ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வகை ஏவுகணைகளை, ரஷ்ய படையினர் பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.

கடந்த 2018ல், ரஷ்ய ராணுவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஏவுகணை, சாதாரண ஏவுகணையை விட, 10 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் திறன் உடையது. இதை, எந்த ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளாலும் சுட்டுவீழ்த்த முடியாது.தாக்குதல் குறித்து ரஷ்யராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைனின் டெலியாடின் பகுதியில், சுரங்கத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கு, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி தகர்க்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

latest tamil news

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உக்ரைன் நகரங்கள் அனைத்தையும் அடிபணிய வைக்க, ரஷ்யா முயற்சித்து வருகிறது. இப்படி ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், பல தலைமுறையினர் அதற்கான பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், என்னை நேரில் சந்தித்து பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைனுக்கு ஆதரவு தந்தரஷ்ய விண்வெளி வீரர்கள்?ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நேற்று முன்தினம், மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்கள், ‘சோயுஸ் எம்.எஸ்., 21’ விண்கலத்தில் புறப்பட்டனர். சில மணி நேர பயணத்திற்குப் பின், அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் மூவரும், உக்ரைன் நாட்டின் தேசிய கொடியில் உள்ள நிறங்களைப் போல், மஞ்சள் மற்றும் நீல நிற சீருடைகளை அணிந்து சென்றது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்தப் படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

புடின் உரையை நிறுத்திய அரசு தொலைக்காட்சி

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, ரஷ்யாவில் ஆங்காங்கே மக்களின் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், மாஸ்கோவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன் ஆதாரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ரஷ்ய அரசு தொலைக்காட்சியில், அவரது உரை திடீரென நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும், சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த இடையூறு ஏற்பட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.