திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை அருகே உள்ள மங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி சபீனா (வயது 35.). தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சபீனா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான சபீனா பிரசவத்திற்காக கடந்த 14-ந் தேதி சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு பெண் பர்தா அணிந்தபடி மருத்துவமனைக்கு வந்தார்.
பிரசவ வார்டுக்குள் நுழைந்த அவர் சபீனாவின் ஆண் குழந்தையை தூக்கிச் சென்று விட்டார். திடுக்கிட்டு எழுந்த சபீனா தனது குழந்தையை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மருத்துவமனை உட்பட பல இடங்களில் தேடி பார்த்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
குழந்தையை கடத்தி சென்ற தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து சித்தூர் 2- டவுன் போலீசில் சபீர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சி.சி.டி.வி. கேமராவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் பஜார் வீதி, பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை தேடினர்.
அப்போது பஸ் நிலையத்திலிருந்து பர்தா அணிந்த பெண் ஒருவர் வெளியே செல்வதைக் கண்டனர். அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சித்தூர் சந்தப்பேட்டை சேர்ந்த பவித்ரா என்பதும் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சபீனாவின் குழந்தையை கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்படுவதாகவும், குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால் ரூ.20 லட்சம் தருவதாகவும் அதற்காக முன்பணமாக ரூ.50 ஆயிரம் தந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சபீனாவின் ஆண் குழந்தையை கடத்தி வந்து பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் டாக்டரிடம் கொடுத்ததாக கூறினார். குழந்தை வாங்கி கொண்ட பெண் டாக்டர் விசாகப்பட்டினத்திற்கு பஸ்சில் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண் டாக்டரை பிடிப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சித்தூரில் இருந்து புறப்பட்ட பஸ் குண்டூர் பஸ் நிலையத்தை கடந்து விசாகப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் சபீனாவின் குழந்தையுடன் பெண் டாக்டர் இருப்பதை கண்டு பிடித்தனர். குழந்தையை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் குழந்தைக்கு முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர். போலீசார் குழந்தை கடத்திய பெண்ணையும் டாக்டரையும் சித்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.