புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக செயல்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார். கடந்த பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.07 சதவீதம் உயர்ந்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் அல்லாதவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று அரசு வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பணவீக்கம் என்பது அனைத்து இந்தியர்களுக்கும் விதிக்கப்பட்ட வரியாகும். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பே சாதனை படைத்த விலை உயர்வானது ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கிவிட்டது. பணவீக்கம் மேலும் உயரும். கச்சா எண்ணெய் பேரலுக்கு 100 டாலர்-உணவு பொருட்கள் விலை 22 சதவீதமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று உலக விநியோக சங்கிலியை பாதித்துள்ளது. ஒன்றிய அரசு இப்ேபாதே செயல்பட வேண்டும். பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.