புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் வீடுகள், சொத்துக்களை விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி டெல்லி உட்பட பல இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர்.
அவர்கள் விட்டுச் சென்ற வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் குல்தீப் சிங் கூறியதாவது: காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் 10 இடங்களில் முகாம்கள் அமைப்பதற்காக 65 ஏக்கர் நிலத்தை சிஆர்பிஎஃப்-க்கு காஷ்மீர் அரசு ஒதுக்கியுள்ளது. சிஆர்பிஎஃப் படையினர் தங்கியுள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களின் வாடகையை உரிமையாளர்களுக்கு காஷ்மீர் அரசு நிர்வாகம் கொடுக்கிறது. காஷ்மீரில் இருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட்கள் திரும்பி வந்தால் அவர்களுக்கு சொந்தமான வீடுகள், கட்டிடங்களை விட்டு சிஆர்பிஎஃப் வெளியேறத் தயார்.
இவ்வாறு சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் குல்தீப் கூறினார். -பிடிஐ