ஹாசன், : காட்டு யானை பிளிறியதால், தாசில்தார் உட்பட ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஹாசன் ஆலுாரின், பெஞ்சம்மன ஹொசகோட் பேரூராட்சிக்குட்பட்ட, ஹரிஹள்ளி கிராமத்தில், கெஞ்சாம்பிகை கோவில் வளாகத்தில், தாலுகா நிர்வாகம் சார்பில், ‘மாவட்ட கலெக்டரின் நடை, கிராமங்களை நோக்கி’ என்ற, நிகழ்ச்சி நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., எச்.கே.குமாரசாமி பங்கேற்ற பின், யசளூருக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின், கோவில் பின் பகுதியில் உள்ள குளம் அருகில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அளவிட்டு, கைப்பற்றும் பணியில் தாசில்தார் ஷிரின் தாஜ், வருவாய்த்துறை அதிகாரிகள், சர்வேயர்கள் ஈடுபட்டிருந்தனர்.பணிகள் முடியும் நேரத்தில், அந்த இடத்திலிருந்து, 40 அடி தொலைவிலுள்ள காபி தோட்டத்தில் இருந்த காட்டு யானையொன்று, பெரும் சத்தத்துடன் பிளிறியது.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும், அங்கிருந்து வேகமாக ஓடினர். ஓடும் அவசரத்தில், தாசில்தார் செருப்பு தடுக்கி விழுந்தார். அவரை கோவில் அர்ச்சகர், மேலே துாக்கிவிட்டு ஓடும் போது, சர்வேயர் குமார் தொடரி மீது மோதியதில், கீழே விழுந்த அவரது மார்பில் அடிபட்டது.யானை சத்தமாக பிளிறியிருக்காவிட்டால், அங்கிருந்தோருக்கு, அருகில் யானை இருப்பது தெரிந்திருக்காது.அதன் தாக்குதலுக்கு ஆளாக நேர்ந்திருக்கும். தாசில்தாரும், குமாரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். கெஞ்சாம்பிகை தேவி அனைவரையும் காப்பாற்றியதாக நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Advertisement