காங்கிரஸ் எம்எல்ஏ ரிசார்ட்டில் மது விருந்து: காவல் ஆணையரின் அதிரடி என்ட்ரி-நடந்தது என்ன?

பனையூரில் ரிசார்ட்டில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மது விருந்தில் கலந்துகொண்ட 500 பேரை காவல்துறை சிறை வைத்தது. அவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று விசாரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அனுமதி பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் மது விருந்து நடப்பதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆர்ச்சிர்ட் ரிசார்ட் என்ற தனியார் விடுதிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். கானாத்தூர் போலீசாரும் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
image

இதில் அங்கே அனுமதி இல்லாமல் திறந்தவெளியில் மது விருந்து நடந்தது தெரிய வந்தது. சுமார் 500 பேர் அங்கு மது விருந்தில் பங்கேற்று நடனம் ஆடி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதில் 50 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உடனடியாக போலீசார் மது விருந்தை நிறுத்தினர். யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவவில்லை. விங்ஸ் (WINGS) என்ற நிறுவன ஓப்பந்ததின் அடிப்படையில் மேலாளர் சைமன் தலைமையில் இசை நிகழ்ச்சி மற்றும் மது விருந்து நடந்து வருவது தெரியவந்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரிடையாக அங்கு சென்றார். அங்கு சிறைபிடித்து வைக்கப்பட்ட இளைஞர்களிடம் பேசி அறிவுரை வழங்கினார். போலீசார் அங்கு சோதனை நடத்தினர். வெளிநாட்டு மதுபானங்கள்,வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.  தொடர்ந்து போலீசார் இசை நிகழ்ச்சி மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்டோரின் பெயர் மற்றும் முகவரிகளை போலீசார் பெற்றனர்.
image

தாம்பரம் காவல் ஆணையர் ரவி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். அது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இங்கு போதைபொருட்கள் இல்லை. நீங்கள் தான் இந்தியாவின் பவர். உங்களுடைய வாழ்க்கை கெடக்கூடாது. இளைஞர்கள் தான் நாட்டின் அடையாளம். வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கலாம். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. தவறான பாதைக்கு செல்லக்கூடாது. போதைக்கு அடிமையாகாதீர்கள். நீங்கள் இங்கிருந்து செல்லலாம். அதிவேகமாக வாகனத்தை ஓட்டாதீர்கள்” என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்நிலையில் மது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ரிசார்ட் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமானது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் நேரில் வந்த போது காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அங்கு போதைபொருட்கள் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.