கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (79). ஹமீதுக்கு இரண்டு மகன்கள். அதில் இரண்டாவது முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹரா (17), அஸ்னா(13) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ஹமீதுக்கும் அவர் மகன் முகமது பைசலுக்கும் சொத்து சம்பந்தமாக சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதையடுத்து முகமது பைசல் புதிதாக ஒரு வீடு கட்டி வந்துள்ளார். அந்த வீடு பணி முடிந்து விரைவில் அங்கு குடியேற இருந்தனர். இந்த நிலையில், முகமது பைசலின் மனைவி, மகள்கள் என 4 பேரையும் ஹமீது தீவைத்து எரித்து கொலை செய்துள்ளார். கொலை நடந்த பின்னணி போலீஸாரையே திடுக்கிட வைத்துள்ளது.
சொத்து சம்பந்தமாக இரண்டு நாள்களுக்கு முன்பும் ஹமீதுக்கும், முகமது பைசலுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹமீது தன் மகனை குடும்பத்துடன் எரித்து கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிலிருந்து சில பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியிருக்கிறார் ஹமீது. பின்னர் நேற்று முன் தினம் இரவு அனைவரும் தூங்கிய பின்பு நள்ளிரவில் சுமார் 12:30 மணிக்கு மேல் மகன் முகமது பைசலின் வீட்டுக்கு சென்றுள்ளார். தீ எரியும்போது யாரும் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக மகன், மருமகள், பேத்திகள் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து வாசல் கதவையும் பூட்டியுள்ளார்.
மகன் தூங்கியது அட்டாச் பாத்ரூம் அமைந்துள்ள அறை என்பதால் அங்கிருந்து தண்ணீர் பிடித்து தீயை அணைத்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டு தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியே திறந்து விட்டுள்ளார். வெளியில் இருந்து யாராவது மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் மூலம் தீயை அணைத்துவிடக்கூடாது என்பதற்காக, மின் மோட்டாருக்குச் செல்லும் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார். அதன் பிறகு, தான் வாங்கி வைத்திருந்த பெட்ரோலுடன் மகன், மருமகள், பேத்திகள் தூங்கும் படுக்கை அறை ஜன்னல் வழியாக பெட்ரோலை அறைக்குள் ஊற்றியிருக்கிறார். ஜன்னல் வழியாக தீ வைத்தவர், மகன் உட்பட நான்கு பேரும் தீயில் கருகி உயிருக்கு போராடுவதை வெளியே நின்று சிறிது நேரம் பார்த்திருக்கிறார். தீ நன்றாக பற்றி எரிவதற்காக மீண்டும் மீண்டும் பெட்ரோல் ஜன்னல் வழியாக ஊற்றியிருக்கிறார்.
இதற்கிடையே முகமது பைசலின் போனில் இருந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு போன் சென்றுள்ளது. போன் எடுத்தபோது அலறல் சத்தம் மட்டும் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்து பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முகமது பைசல் வீட்டில் தீ எரிவதை பார்த்துள்ளார். மேலும் சிலர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றுள்ளார். உடனடியாக தொடுபுழா தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அனைத்தனர். ஆனால் அறைக்குள்ளே நான்கு உயிர்களும் கருகி மரணம் அடைந்தன. காவல்துறை உதவியுடன் அறையில் சென்று பார்த்தபோது, பாத் ரூமுக்குள் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நான்குபேரின் உடல்களும் கிடந்துள்ளன.
நான்கு உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மகனின் வீட்டில் தீவைத்ததாக ஹமீது சிலரிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து ஹமீதை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஹமீது தன் இரண்டு மகன்களுக்கும் சொத்துகளை பங்குவைத்து கொடுத்துள்ளார். சொத்து பங்குவைத்து கொடுக்கும்போது ஹமீதுக்கு சில விஷயங்களை செய்துகொடுக்கலாம் என மகன் முகமது பைசல் கூறினாராம். ஆனால், மகன் கூறியதை செய்யாமல் இருந்ததாதகவும், அதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்ததாக ஹமீது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.