கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் உடற்கூறு ஆய்வுக்கு லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த ஊழியர்கள் ஒருபுறம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் ஒருபுறம் என பலர் பணியாற்றி வரும் நிலையில், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் பரிசோதனைக்கு வந்தவர்கள் என்று ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நோயளிகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு லஞ்சம், பிரசவத்திற்கு லஞ்சம் என்று குற்றச்சாட்டு அதிக அளவில் எழுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறையிலும் லஞ்சம் விஸ்வரூபம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்ட அளவில், விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்கள் என பிரேத பரிசோதனைக்கு வரும் பிரேதங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரேதத்தங்களை உடற்கூறாய்வு செய்ய ஏழைகள் என்றால் ரூ ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் மற்ற பிரேதங்கள் என்றால் ரூ 4 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் என்று சவக்கிடங்கு ஊழியர்கள் அநியாய லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது,
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் வாங்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேத பரிசோதனை செய்பவர்கள், பிரேதத்தை கொண்டு வருபவர்களிடம் வாங்கும் பணம், உடற்கூறாய்வு முடிந்த பின்பு பிரேதத்தை கட்டும் துணிகளுக்கு என்று கூறப்படும் நிலையில், அடையாளம் தெரியாத பிரேதத்திற்கு கூட இந்த பணம் கட்டாயமாம்,
பிரேதத்தை கொண்டு வரும் ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் கூட பணம் வாங்கி விட்டு தான் பிரேத பரிசோதனை செய்வார்களாம் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM