தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகத் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் காரணமாக, பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து மார்ச் 1-ம் தேதி வரை ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த ஆன்லைன் தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யவில்லை என்றும், அதனால் அந்த விடைத்தாள்களைத் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்ட காரணத்தால், அவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வி அடையும் அபாய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இது குறித்து ஆலோசிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் குறித்து தவறான செய்திகள் வெளிவருகின்றன. தாமதமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.
மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.