கல்லூரி மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கிராம மக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். லாரி ஓட்டுநரான இவருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த மூத்த மகள் மாலதி, நேற்றிரவு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து உயிரிழந்த மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்கள் உறவினர்கள் மற்றும் பெண்கள் இயக்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM