வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல் அந்தமான் நிகோபார் தீவுகள், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் அந்தமான் நீங்கலாக இந்தியாவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை முதல் மிக கனமழை வரை அந்தமான் நிகோபார் தீவுகளில் பதிவாக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நிகோபார் தீவுகளில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்படும் வானிலை நாளை புயலாக உருவெடுத்து மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பலத்த மழை தற்போது பொழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலை முன்னிட்டு அவசர கால உதவி எண்களை வெளியிட்டுள்ளது அந்தமான் நிகோபார் தீவுகளின் நிர்வாகம். உதவி தேவைபடுபவர்கள் 1-800-345-2714 என்ற இலவச டோல்-ஃப்ரீ நம்பரை அழைக்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM