கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், காஸி எம் ஜெய்புன்னிசா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வகுப்பறைகளுக்குள் ஹிஜாபை தடை செய்யும் மாநில அரசின் முடிவை அண்மையில் உறுதி செய்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி உட்பட மூன்று நீதிபதிகளுக்கு அம்மாநில அரசு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளுக்கு எதிராக ஒரு நபர் மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியானதை அடுத்து பசவராஜ் பொம்மையின் அறிக்கை வந்துள்ளது. “இது ஜனநாயகத்தின் ஆபத்தான அறிகுறிகளில் ஒன்றாகும். மேலும், இதுபோன்ற தேச விரோத சக்திகள் வளராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறையால் நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹிஜாப் வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் மற்றும் காஸி எம் ஜெய்புன்னிசா ஆகியோர் இருந்தனர். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தல், வீடியோ வெளியானதையடுத்து தமிழகத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“மௌனமாக இருக்கும் போலி மதச்சார்பற்றவர்களையும் நான் கேள்வி கேட்கிறேன். இது மதச்சார்பின்மை அல்ல, வகுப்புவாதம். இந்தச் செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்” என்று பொம்மை மேலும் கூறினார்.
வகுப்பறைகளுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த மாநில அரசின் முடிவை கர்நாடக உயர் நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.
வழக்கறிஞர் உமாபதி எஸ், கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம், வாட்ஸ்அப்பில் ஒரு நபர், பொதுக் கூட்டத்தின் போது, ஜார்கண்டில் நீதிபதி ஒருவர் நடந்து சென்றபோது கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ செய்தியைப் பெற்றதாக சனிக்கிழமை புகார் தெரிவித்தார்.
அந்த புகாரில், வீடியோவில் பேசும் நபர், “கர்நாடக தலைமை நீதிபதிக்கு இதேபோன்ற மிரட்டல் விடுத்து, தலைமை நீதிபதி எங்கு வாக்கிங் செல்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும் என்று கூறி உள்ளார். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதையும், குடும்ப உறுப்பினர்களுடன் உடுப்பி மடத்திற்குச் சென்றதையும் அவர் குறிப்பிடுகிறார். அவர் தலைமை நீதிபதியை ஒருமையில் பேசுகிறார். மேலும், தனக்கு எதிராக எந்த வழக்கையும் தாக்கல் செய்ய வெளிப்படையாக சவால் விடுகிறார். நீதிமன்றத் தீர்ப்பை மிகக் கொச்சையான மொழியில் பேசுகிறார். இந்த வீடியோ தமிழ்நாட்டின் மதுரையில் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம்” என்று புகார்தாரர் கூறினார்.
இது தொடர்பாக மற்றொரு வழக்கறிஞர் சுதா கத்வா கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கே ஐபிசி பிரிவுகள் 506(1), 505(1)(சி), 505(1)(பி), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 153A, 109, 504 மற்றும் 505(2) ஆகியவை குற்றவியல் மிரட்டல் மற்றும் சமூகங்களுக்கு இடையே அச்சம் மற்றும் பகையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“