புதுடெல்லி,
அரசியல் கட்சிகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 1990 காலகட்டத்தில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட விவகாரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பயங்கரவாதத்தால் தான் நிகழ்ந்தது என்று கூறினார்.
தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட விவகாரத்தை குறிப்பிட்டு அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் மக்களிடையே 24 மணி நேரமும் பிரிவை உருவாக்குகின்றன. நான் இருக்கும் காங்கிரஸ் கட்சி உட்பட, எந்த கட்சியையும் நான் மன்னிக்கவில்லை.
பொது சமூகம் ஒன்றாக இருக்க வேண்டும். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தி மிகப்பெரிய இந்து மற்றும் மதச்சார்பின்மைவாதி என்பதை நான் வலியுறுத்தி பேசுகிறேன்.
1990 காலகட்டத்தில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட விவகாரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பயங்கரவாதத்தால் தான் நிகழ்ந்தது. இது ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள், முஸ்லிம்கள், டோக்ராக்கள் உட்பட அனைவரையும் பாதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.