புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், தனது லோக்தந்திரிக் ஜனதா தளத்தை(எல்ஜேடி) லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்திரிய ஜனதா தளத்துடன்(ஆர்ஜேடி) இணைத்து கொண்டார்.
இது பீகார் மாநில அரசியலை தாண்டி தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பு குறித்து சரத் யாதவ் கூறியதாவது,
“இது ஒன்றுபட்ட எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.
இப்போதைக்கு, ஒற்றுமையே எங்கள் முன்னுரிமை. ஒன்றிணைந்த எதிரணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து பின்னர் சிந்திக்கலாம்” என்றார்.
முன்னதாக மத்தியில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், சரத் யாதவ் கேபினட் மந்திரியாக இருந்தார்.
தற்போது பாஜகவை எதிர்க்க மீண்டும் ஒன்றிணைந்துள்ளார். சமீபத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தலைவர்களும், 25 வருட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக இணைந்துள்ளனர்.
1997ம் ஆண்டு, தற்போதைய பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருடன் இணைந்து சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தள கட்சியை தொடங்கினார். அப்போது லாலு பிரசாத் யாதவ் ராஷ்திரிய ஜனதா தள கட்சியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் 2018ம் ஆண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான விவகாரத்தால், ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து பிரிந்து லோக்தந்திரிக் ஜனதா தளத்தை சரத் யாதவ் தொடங்கினார்.
அதன்பின் அவருடைய கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. இருந்தபோதும், அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த இணைப்பால், ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் ராஷ்திரிய ஜனதா தள சார்பில் சரத் யாதவ் முன்னிறுத்தப்படுவார் என தெரிகிறது.