மணிப்பூர் மாநில முதலமைச்சராக, இரண்டாவது முறையாக, பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில், மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு அண்மையில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ஆளும்
பாஜக
, 32 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. எனினும், முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது குறித்து பாஜகவில் பெரும் குழப்பம் நிலவியது. மீண்டும் முதலமைச்சராக பிரேன் சிங்கை தேர்வு செய்யலாமா அல்லது புது முகத்திற்கு வாய்ப்பு வழங்கலாமா என்பது குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், தலைநகர் இம்பாலில், முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்திற்கு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் தலைமை வகித்தனர். முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங்கிற்கு மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதனை அடுத்து, ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பிரேன் சிங் உரிமை கோர உள்ளார். விரைவில், அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும், அமைச்சரவையை தேர்வு செய்வது குறித்தும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சி மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.