ராணிப்பேட்டை: சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சாமி தரிசனம் செய்தார். பாலமுருகனை வழிபாடு செய்து பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘கரோனாவில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். வெளியில் செல்லக் கூடியவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா நம்மை விட்டு இன்னும் போகவில்லை. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை நாம் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சீனா போன்ற நாடுகளில் கரோனா தற்போது அதிகளவில் பருவி வருகிறது. எனவே, நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு 12வயதில் இருந்து 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வயதானவர்கள், 30 வயதை கடந்தோர் எப்படி ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டோர்களே அதேபோல, தங்கள் வீட்டிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு தடுப்பூசியை செலுத்துவது என்பது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவர் பிரச்சினையை தீர்க்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாங்கள் சந்தித்து பேசியுள்ளோம். அவர் எல்லாவித உதவிகளையும் செய்து கொண்டுப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் உள்ள மாணவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை எப்படி எல்லா முயற்சிகளை மேற்கொண்டதோ, அதேபோல, மீனவ சகோதரர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதற்காக பிரதமருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’. என்றார்.
முன்னதாக பாலமுருகன் கோயிலுக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.