படோர்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் ஐதராபாத் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் 3-1 என, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் கேரளாவை வீழ்த்தியது.
கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடந்தது. படோர்டாவில் நடந்த பைனலில் கேரளா, ஐதராபாத் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கேரளா அணிக்கு 68வது நிமிடத்தில் ஜீக்சன் சிங் ‘பாஸ்’ செய்த பந்தில் ராகுல் பிரவீன் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய ஐதராபாத் அணிக்கு 88வது நிமிடத்தில் சாஹில் தவோரா ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. பின் இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. மீண்டும் போட்டி 1-1 என சமநிலை வகித்தது.
இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் வாய்ப்பை கேரளாவின் மார்கோ லெஸ்கோவிச் வீணடிக்க, ஐதராபாத் வீரர் ஜோவோ விக்டர் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாவது வாய்ப்பை நிஷு குமார் (கேரளா), ஜாவி சிவேரியோ (ஐதராபாத்) வீணடித்தனர். மூன்றாவது வாய்ப்பில் ஆயுஷ் அதிகாரி (கேரளா), காஸ்சா கமரா (ஐதராபாத்) கோல் அடித்தனர். நான்காவது வாய்ப்பை கேரளாவின் ஜீக்சன் சிங் வீணடிக்க, ஐதராபாத் வீரர் ஹாலிசரண் நர்சாரி கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதுவரை சாம்பியன்
ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் கோல்கட்டா அணி அதிகபட்சமாக மூன்று முறை (2014, 2016, 2019-20) கோப்பை வென்றுள்ளது. சென்னை (2015, 2017-18) 2 முறை, பெங்களூரு (2018-19), மும்பை (2020-21), ஐதராபாத் (2021-22) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
Advertisement