நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு முகாமில் குறைந்தது 1500 பேர் பயன்பெற வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து முகாம்களை நடத்த வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 55 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 47 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர். தமிழக முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 92.6 சதவீதம் பேர் முதல் கட்ட தடுப்பு செலுத்தி உள்ளனர்.
ஆனால் குமரி மாவட்டத்தில் 80.42 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்துடன் குமரி மாவட்டத்தை ஒப்பிடுகையில் முதல் கட்ட தடுப்பூசியை 12 சதவீதம் பேர் குறைவாக செலுத்தி உள்ளது. இதே போல் தமிழகத்தில் இரண்டாவது தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் 65 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். இதுவும் 10 சதவீதம் குறைவு ஆகும்.
இதே போல நெல்லை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் குறைவான சதவீதமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். எனவே குமரி மாவட்ட உள்பட 5 மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரளாவிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பாதிப்பு இல்லை. எனினும் ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் இதுவரை 32 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தபோது 10-க்கும் மேற்பட்டவர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெறுவது தெரியவந்தது. தமிழ்நாட்டிலேயே இங்கு தான் அதிகமான தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுரையில் 2 முதல் 3 வரையிலான நபர்களே தற்கொலைக்கு முயன்று சிகிக்சை பெற்று வருகின்றனர். எனவே இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். எனவே கடைகளில் பூச்சி மருந்தை வெளிப்படையாக வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், தனி நபர்களுக்கு பூச்சி மருந்து மற்றும் சாணி பவுடர் விற்கக்கூடாது என்றும் சட்டம் கொண்டுவரப்படும்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ரூ.14 கோடி செலவில் புதிய உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் தற்போது 100 படுக்கைகள் உள்ளது. வரும் நிதியாண்டில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் செய்யப்படும். இதேபோல் குமரி மாவட்டத்தில் தேவைப்படும் இடத்தில் புதிதாக ஒரு அரசு ஆரம்பம் சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார அமைக்க வரும் நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். ஆறுதேசத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக சட்டசபை உறுப்பினர் கூறியுள்ளார். எனவே அதை சீரமைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். குளச்சல் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கிட்னிக்காக ஆண் குழந்தை கடத்தல்- பெண் கைது