சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழைபெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘அசானி’ எனப் பெயர் வைத்துள்ள வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது என்றும் அந்த எச்சரிக்கையை கூறப்பட்டுள்ளது.