மொத்த டீசல் கொள்முதல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் வரை உயர்த்தபட்டதாக கூறப்படும் நிலையில், சில்லறை விலையில் அதனை வாங்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தினசரி தமிழக அரசு பேருந்துகளுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்யும் நிலையில், விலை உயர்வால் நாள்தோறும் 3 கோடியே 50 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, சில்லறை விற்பனை விலையில் டீசல் வாங்க முடிவு செய்துள்ளது. மொத்த கொள்முதல் விலையில் டீசல் லிட்டருக்கு 113 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுவதாகவும், சில்லறையில் அதனை 90 ரூபாய் 40 காசுகளுக்கு வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.