புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், அரசு முறைப் பயணமாக ஏப்., 2ல் இந்தியா வருகிறார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்தலி பென்னட், அக்., மாதம் கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா., காலநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்றார். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.இதையடுத்து பிரதமர் நப்தலி பென்னட், ஏப்., 2ல் நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இரு நாடுகள் இடையிலான உறவுகள் துவங்கி, 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற பென்னட், முதல் முறையாக இந்தியா வருகிறார்.இரு நாடுகள் இடையிலான தொழில்நுட்பம், பாதுகாப்பு, இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது இப்பயணத்தின் நோக்கமாகும். இது குறித்து, பிரதமர் நப்தலி பென்னட் வெளியிட்டுள்ள அறிக்கை:என் நண்பரான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறேன்
.நாங்கள் ஒன்றிணைந்து உறவு, நாடுகளின் வளர்ச்சியை பலப்படுத்துவோம். இது, இரு நாடுகளின் பரஸ்பர உதவி மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும்.இந்திய மற்றும் யூத கலாசாரம் பழமையும், தனித்துவமும் வாய்ந்தது. இந்தியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இந்த பயணம் அதற்கு உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement