பெங்களூரு: கர்நாடகா பள்ளிகளில் சீருடை தவிர வேறு, ஹிஜாப் உள்ளிட்ட எந்த உடைகளையும் அணியக் கூடாது என கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, பெங்களூரு விதான சவுதா போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூரு ஆர்டி நகரில் முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, தமிழகத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்திய பிறகு, கர்நாடகா போலீசார் விசாரணை நடத்துவார்கள். இந்த விஷயத்தை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளாது. கொலை மிரட்டலை தொடர்ந்து, தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் இதுபோன்ற செயலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கும் போது இது போன்ற மிரட்டல்களில் ஈடுபடுவது நியாயம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.