துபாய்-ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் அமைப்பு, தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவன வளாகங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக, சவுதி அரேபியா கூறியுள்ளது.
மேற்காசிய நாடான ஏமனில், அரசுக்கும், ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2014ல் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படைகளுக்கு, சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி, மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், ‘ஆரம்கோ’ எனப்படும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம், தன் லாபம், 124 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து சவுதி அரேபியாவில், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான எல்.பி.ஜி., எனப்படும் ‘சமையல் காஸ்’ தயாரிக்கும் ஆலை மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, ஹவுதி பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆனால், ‘இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை’ என, சவுதி அரேபியா கூறியுள்ளது.
Advertisement