புதுடெல்லி: `இனி அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, முகக் கவசம் அணிவதற்கான விதிகளை தளர்த்தலாம்,’ என்று எய்ம்ஸ் நோய் தொற்றுயியல் மருத்துவர் தெரிவித்தார். மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 46 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 676 பேர் பாதித்துள்ளனர். மேலும், 60 லட்சத்து 75 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப நாட்களாக தென் கொரியா, சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதே நேரம், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தினசரி பாதிப்பும், பலியும் கணிசமாக குறையத் தொடங்கி விட்டது. இதனால், முகக் கவசம் அணிவதில் இருந்து அரசு சற்று தளர்வு அளிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சய் ராய் கூறியதாவது: இந்தியாவில் கடந்தாண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கொரோனா 2வது அலையால் பேரழிவு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் உருமாறிய போதும், அதில் 5 உருமாறிய வைரஸ்களே மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தின. மக்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் தொற்று, நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதுவே, இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இது தவிர, நாடு முழுவதும் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், இனி அடுத்தடுத்து வரும் கொரோனா அலையினால் இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதிப்பு இருக்காது.அதே நேரம், முதியவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை குறித்து தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கையாக அதனை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.