#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 26-வது நாள்: நடுநிலையை கைவிட்டு ஆதரவளிக்க வேண்டும்- இஸ்ரேலுக்கு, உக்ரைன் வலியுறுத்தல்

21-03-2022
1.50: ரஷியா விவகாரத்தில் நடுநிலையை கைவிட்டு தங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு, உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி, 80 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களை உக்ரைன் காப்பாற்றியதாக நினைவு கூர்ந்தார். தற்போது இஸ்ரேல் நடுநிலைமையை கைவிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20-03-2022
23.50: உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை, போரை முடிவுக்கு கொண்டு வரும் திறன் படைத்தல்ல என்று அமெரிக்க  பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின்,  அடுத்த தலைமுறை ஆயுதமான ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை என கூறியுள்ளார். .உக்ரைன் நகரங்கள் மீது அதுபோன்ற ஆயுதங்களை கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்த புதின் உத்தரவிடக் கூடும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
22.15: பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க அனுமதிக்கும் வகையில் ரஷியர்களுக்கு கணிசமான ராணுவ உதவி அல்லது நிதி உதவியை வழங்க சீனா முடிவு செய்தால், பின்விளைவுகள் ஏற்படும் என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் எச்சரித்துள்ளார்.
19.40: உக்ரைனில் ரஷியா தாக்குதலை தொடங்கியதில் இருந்து மார்ச் 19ம் தேதி வரை பொதுமக்கள் தரப்பில் 902 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1459 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
19.30: போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷியா 14700 துருப்புகளை இழந்துள்ளதாக உக்ரைன் கூறி உள்ளது. 
18.50: ரஷியா மீது மறைமுகமாக விமர்சனம் செய்து வரும் போப் பிரான்சிஸ், உக்ரைனில் தினமும் படுகொலைகளும் அட்டூழியங்களும் நடப்பதாக கூறி உள்ளார். இன்று நடந்த தாக்குதலை நியாயமற்ற “முட்டாள்தனமான படுகொலை” என்று கூறியதுடன், போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.