தமிழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், கடந்த 2011 வரை பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நிதி உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கத்தையும் அறிவித்தார். பின்னர், 2016-ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, தாலிக்கான தங்கத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தி அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு பதிலாக உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தற்போதைய தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், “பொருளாதார சூழ்நிலையால் ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண்களின் திருமணம் தடைபடுவதை தடுக்க, தொலைநோக்கு சிந்தனையுடன் திருமண உதவித் திட்டத்துடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவர் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால், வேண்டுமென்றே இத்திட்டத்தை கைவிட்டுள்ளனர்” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.