லீவ்,-உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற போராடி வரும் ரஷ்ய ராணுவம், அங்குள்ள பள்ளி கட்டடத்தை ஏவுகணை வீசி தாக்கியது.
இந்தக் கட்டடத்தில், 400 பேர், பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர் எனக் கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து, 34 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வார சண்டையில் உக்ரைனில், 847 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா., உறுதிபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் உண்மையான பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.உடல்கள் புதைப்புஉக்ரைன் படைகளின் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் ரஷ்ய ராணுவம் திணறி வருகிறது. ரஷ்ய ராணுவத்தில், 4,000க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. சமீபத்தில், 1,300 பேர் பதுங்கியிருந்த நாடக அரங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில், மரியுபோலில் உள்ள ஒரு ஓவிய பள்ளி கட்டடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது. இந்தக் கட்டடத்தில், 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த சம்பவத்திலும் பாதிப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.இதுவரை நடந்த போரில் மரியுபோல் நகர்தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, 2,300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பெரிய குழிகள் தோண்டப்பட்டு, உடல்கள் ஒட்டு மொத்தமாக புதைக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நேரில் ஆறுதல்இதற்கிடையே மின்சாரம், குடிநீர், உணவுப் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.”மிகவும் அமைதியான இந்த நகரின் மீது ஆக்கிரமிப்பாளர்கள் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்
. பல நுாற்றாண்டுகளுக்கு இந்த சம்பவம் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.”மிக கடுமையான பாதிப்புகளை ரஷ்யா சந்திக்க நேரிடும்,” என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.போரில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்களை, உக்ரைன் அதிபர் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். தலைநகர் கீவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வாடகை தாய்கள் வாயிலாக, கடந்த சில நாட்களில் பிறந்த 20 குழந்தைகளை, அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவதால், அங்கேயே வைத்து குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.வடகிழக்கில் உள்ள சுமி நகரில், போரில் பெற்றோரை இழந்த, 71 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, ஒலியின் வேகத்தைவிட, 10 மடங்கு வேகமாக செல்லக் கூடிய, ‘கின்ஜால்’ என்ற அதிவேக ஏவுகணை மூலம், கார்பாதியான் மலைப் பகுதியில் இருந்த ஆயுதக் கிடங்கை அழித்ததாக, ரஷ்யா கூறியுள்ளது.
அதேபோல் மிகோலைவ் துறைமுக நகருக்கு அருகே இருந்த எரிபொருள் கிடங்கையும், இந்த ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாகவும் ரஷ்யா கூறியுள்ளது.கட்சிகளுக்கு தடைஉக்ரைனில் போருக்கு எதிரான போராட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், ரஷ்யாவுடன் தொடர்பு உள்ள, 11 அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்கடும் போரை சந்தித்து வரும் மரியுபோல் நகரில் இருந்து கடந்த வாரத்தில் மட்டும், 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மனிதநேய அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்கு அனுமதி அளித்துள்ள பாதை வழியாக, 8,000 வாகனங்களில் இந்த மக்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.உருக்காலை அழிப்புமரியுபோலில் உள்ள ஐரோப்பியாவிலேயே மிகவும் பெரிய இரும்பு மற்றும் உருக்கு ஆலையான, ‘அசோவ்ஸ்டால்’ மீது ஏவுகணை வீசப்பட்டுள்ளது. இதில் அந்த ஆலை கடுமையாக சேதமடைந்துள்ளது. கரும்புகையுடன் தீப்பிடித்து எரியும் ஆலையின் ‘வீடியோ’ வெளியாகி உள்ளது.