பெங்களூரு-‘ஹிஜாப்’ விவகாரத்தில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள உடுப்பியைச் சேர்ந்த சில கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள், ஹிஜாப் எனப்படும், தலை மற்றும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்து வர முஸ்லிம் மாணவியர் சிலர் அனுமதி கேட்டனர். கொலை மிரட்டல்இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.அதில், ‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய, மாநில அரசு விதித்த தடை செல்லும்’ என, தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது.கொலை மிரட்டல் விடுத்த, தமிழக தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரை போலீசார் மதுரையில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று கூறியதாவது:கர்நாடகா வழக்கறிஞர் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, விதான சவுதா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரை கர்நாடகா அழைத்து வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நீதித்துறை அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். நம் நாட்டின் அமைப்புக்கு எதிராக மக்களை துாண்டிவிட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதுபேன்ற செயல்கள் உடனுக்குடன் ஒடுக்கப்படும்.அச்சுறுத்தல்மற்ற விவகாரத்தில் உடனடியாக கருத்து தெரிவிக்கும் போலி மதச்சார்பின்மைவாதிகள் இப்போது மவுனம் காக்கின்றனர்.
சமூகத்தில் ஒரு பிரிவினரை துாண்டிவிடுவது மதச்சார்பின்மை ஆகாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டின் சட்டம் – ஒழுங்கு காக்கப்படுவதற்கு நீதித்துறையின் பங்கு அளப்பறியது. அதற்கு ஏற்படும் அச்சுறுத்தல் இந்த ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக கருதப்படும்.
ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீக் ஷித், ஜே.எம்.காஸி ஆகியோருக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதன்படி, மூன்று நீதிபதிகளுக்கும், ரிசர்வ் போலீஸ் படையின் எட்டு வீரர்கள், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்குவர்.
Advertisement