இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்- பாக்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விவாதம்

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பிரதமர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்து வரும் அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 100 பேர், கடந்த 8-ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்துள்ளனர்.
மேலும் 14 நாட்களுக்குள் பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், சரியான நேரத்தில் பாராளுமன்றத்தை கூட்டா விட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றும் எதிர்க்கட்சிகள் மிரட்டியுள்ளன.
இம்ரான்கானின் சொந்த கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை சேர்ந்த 24 எம்.பி.க்களும் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். இதனால் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானுக்கு அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.
இந்நிலையில் பாக்.பாராளுமன்ற சபாநாயகர் அசாத் கைசர் வெளியிட்ட அறிவிப்பில், வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பாகிஸ்தான் பாராளுமன்றம் கூடும் என்றும், அப்போது கீழ்சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி பாராளுமன்றத்தில்  எடுத்துக் கொள்ளப்பட்டதும்,  அதன் மீதான வாக்கெடுப்பு மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்பதால் வருகிற 28-ந்தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்ரான்கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 172 வாக்குகள் தேவைப்படுகிறது. 
தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் 160 எம்.பி.க்கள் ஆதரவு  எதிரிக்கட்சிகளுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் எம்.பி.க்களை இழுக்க குதிரை பேரத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக இம்ரான்கான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.