பீஜிங்-”இந்தோ – பசிபிக் கடல் பகுதியை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் திட்டம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்,” என, சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லீ யுசெங் தெரிவித்துள்ளார்
.இந்தோ – பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் விதமாக, ‘குவாட்’ அமைப்பை அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமைத்துள்ளன. இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சரும், இந்தியாவுக்கான முன்னாள் சீன துாதருமான லீ யுசெங் நேற்று முன்தினம் கூறியதாவது:கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவ மாட்டோம் என, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய, ‘நேட்டோ’ அமைப்பு ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மீறி, உக்ரைனை சேர்த்துக் கொள்ள சம்மதித்தது தான், பிரச்னையின் ஆரம்ப புள்ளி.
தங்கள் பாதுகாப்பை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டால், பாதுகாப்பற்ற நிலையே ஏற்படும் என்பதற்கு ரஷ்யா – உக்ரைன் போர் சிறந்த உதாரணம்.இந்தோ – பசிபிக் கடல் பகுதியை ஆக்கிரமிக்க, ‘குவாட்’ அமைப்பு வாயிலாக அமெரிக்கா முயற்சிப்பது மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement