அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த இலட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும்,பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
ஆனால், இதற்கு மாறான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசும், காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் கர்நாடக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பேபி அணையைப் வலுப்படுத்தவும் ஏதுவாக அங்குள்ள மாங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ கோள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.
கேரள அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது போன்றவற்றையும் கேரள அரசு மேற்கொண்டு வந்ததோடு, அலுவலகப் பணிகளைப் பராமரிக்கத் தேவையான தளவாடப் பொருட்களைக்கூட எடுத்துச் செல்லவும் இடையூறு ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு அணை என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒர் அணையாகும். இதனைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் கேரள அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வண்ணம், கேரள அரசு ஒரு நாடகத்தை அண்மையில் அரங்கேற்றியுள்ளதாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாடு நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான படகில் கேரள அரசின் ஒய்வுபெற்ற இரண்டு சார்நிலை அலுவலர்கள், டில்லி காவலர் மற்றும் அவரது மகன் என நான்கு பேர் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றதாகவும், அங்குள்ள கேரள காவல் துறையினரின் குடியிருப்புகளுக்குச் சென்று, உணவு அருந்தி, சற்று ஒய்வெடுத்த பின் அதே படகில் தேக்கடி திரும்பியதாகவும், இதனைக் காரணம் காட்டி அணைப் பகுதிக்கு செல்பவர்கள் கேரள வனத் துறையின் முன் அனுமதி பெற்று, தேக்கடியில் பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டுமென கேரள வனத் துறை நிபந்தனை விதித்துள்ளதாகவும், அதே சமயத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குழமுளியைச் சேர்ந்த இரண்டு ஓய்வு பெற்ற கேரள காவல் துறை சார் ஆய்வாளர்கள் மீது சாதாரண வழக்கு பெயருக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முல்லைப் பெரியாறு அணையினை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துவர ஏதுவாக கேரள அரசு நடத்திய நாடகம் இது என்றும் கூறப்படுகிறது.
கேரள அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள அரசின் செயல்பாடு இப்படி என்றால், கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்பட்டால் மாண்புமிகு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடாக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி பிரச்சனை குறித்து முதல்வர் அவர்களும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இதுகுறித்து நான் பல அறிக்கைகளை விடுத்தும், இதுகுறித்து மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது.
தி.மு.க. குடும்பத்திற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் வணிக ரீதியான செயல்பாடுகள் இருப்பதால், தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இதேபோல், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதால், தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்காமல் இருக்கின்றனவோ, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி பேசாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது. எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்ற வாசகங்களை மனதில் நிலைநிறுத்தி, முல்லைப் .
பெரியாறு மற்றும் காவேரி நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து 4 ஹறைறுமையாக குரல் கொடுத்து, தமிழ்நாட்டின் பலத்தை பறைசாற்ற வேண்டும் – என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறேம்” என்று ஓபிஎஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.