சண்டிகர்: ‘மக்களின் பணத்தை திருடினால் பொறுக்க மாட்டேன். அமைச்சர்கள் வேலை செய்யவில்லை என்றால், பதவியை விட்டு நீக்கப்படுவார்கள்,’ என்று பஞ்சாப்பில் கெஜ்ரிவால் எச்சரித்து உள்ளார். பஞ்சாப்பில் நடந்து முடிந்து சட்டப்பேரவை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. முதல்வராக பக்வந்த் மான் பதவியேற்றார். தொடர்ந்து, 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலமாக நேற்று உரையாற்றினார். அப்போது அவர், ‘புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு முதல்வர் பகவந்த் மான் நிர்ணயித்துள்ள இலக்கை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், பதவியை விட்டு விலக தயாராக இருக்க வேண்டும். கட்சியின் 92 எம்எல்ஏக்களும் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் வலுவான அணியாக, நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். கட்சித் தலைவர்கள் ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், நேர்மையின்மை, மக்களின் பணத்தை திருடுவதையும் ஏற்க முடியாது. தவறு செய்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்க மாட்டேன்,’’ என்றார்.