பசவராஜ் பொம்மைக்கு மக்களை விட சினிமா நிகழ்ச்சி தான் முக்கியம்: குமாரசாமி

பெங்களூரு :

துமகூரு மாவட்டம் பாவகடாவில் நேற்று ஒரு தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்று வருகிறவா்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

துமகூரு விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். வரும் நாட்களில் பஸ்களில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற விபத்துகளை தடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தனியார் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்வதாக கூறுவது சரியல்ல.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை இந்த அரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது. கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்களின் செலவை அரசு குறைத்துள்ளது. அதனால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பாவகடா தாலுகாவில் அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. விபத்தில் காயம் அடைந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. அவர்கள் குணமாகி வந்ததும் சிறப்பு தேர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் பஸ்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்க வேண்டும். அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்ற வேண்டும்.

கர்நாடகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஒரு சினிமா நிகழ்ச்சியில் 4 மணி நேரம் செலவு செய்துள்ளார். மக்கள் விபத்தில் சிக்கி கஷ்டப்பட்டாலும், அவருக்கு சினிமா நிகழ்ச்சி தான் முக்கியமாக இருந்துள்ளது. மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வாக்குகளை பெறுவது சமீப காலமாக அதிகரித்துவிட்டது. மக்கள் அறிவாளிகள். துமகூரு விபத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.