தஞ்சாவூர்: புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் மிகவும் பிரசித்தி பெற்றது. 17-ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாதஸ்வர இசையில் “சுத்த மத்தியமம் ஸ்வரம்” மற்றும் “பிரதி மத்தியமம் ஸ்வரம்” கொண்டு தான் தாய் ராகங்களை பிரித்து வாசிக்கப்படும். இந்த நாதஸ்வர கருவியை கடந்த 1955 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகில் உள்ள நரசிங்கம்பேட்டை கைவினைக் கலைஞர் ரங்கநாத ஆச்சாரி எளிமையாக வாசிக்கும் வகையில் உருவாக்கினார். அதுதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்.
தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டையில், தற்போது 20 குடும்பங்களை சேர்ந்த இசைக்கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு இசைக்கப்படும் பாரம்பரிய இசைக்கருவியான இந்த நாதஸ்வரம், ஆச்சாமரம் எனும் வகை மரத்திலிருந்து பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ப.சஞ்சய்காந்தி “தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும், சங்கீதங்களின் கோட்டையாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17-ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினைக் கலைஞர் என்பவரால், நாதஸ்வரத்தில் “சுத்த மத்தியமம் ஸ்வர”த்தை கண்டுபிடித்து அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினர். இந்த இசைக்கருவி எளிதாக இசைக்க முடிந்தது. தற்போது இந்த நாதஸ்வரம் கருவி 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இந்த இசைக்கருவியை கொண்டு வாசித்த ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம் உள்பட புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்களும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். எனவே இந்த நாதஸ்வரத்தை திராவிடர்களின் இசைக்கருவி என அழைக்கப்படுகிறது. தறபோது அதற்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.