கண்ணூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சிபிஐ(எம்) -இன் 23வது கட்சி மாநாட்டில் நடத்தப்படும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள கட்சித் தலைவர்களுக்கு கேரள காங்கிரஸ் பிரிவு தடை விதித்துள்ளது. இந்த முடிவு காங்கிரஸின் அரசியல் ஏழ்மைத்தன்மையைக் காட்டுகிறது என்று சிபிஎம் விமர்சித்துள்ளது.
தேசிய பிரச்சனைகள் தொடர்பான கருத்தரங்குகளின் வெவ்வேறு அமர்வுகளுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர், முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தாமஸ் ஆகியோருக்கு CPI(M) அழைப்பு விடுத்திருந்தது.
மதச்சார்பின்மை மற்றும் சவால்கள் குறித்த கருத்தரங்கிற்கு தரூர் அழைக்கப்பட்டுள்ளார். அதே போல், தாமஸ் மாநில-மத்திய உறவு குறித்த மற்றொரு அமர்வில் உரையாற்ற இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், “CPI(M) கருத்தரங்களில் எம்.பி.க்கள் உட்பட அனைத்து தலைவர்களும் பங்கேற்க கூடாது என கட்சி உத்தரவிட்டுள்ளது. இதை மீறி பங்கேற்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மக்களை வேதனையில் ஆழ்த்தும் செமி ஹை ஸ்பீடு ரெயில் பாதை என்கிற திட்டத்தை சிபிஎம் கையில் எடுத்துள்ள சமயத்தில், இத்தகைய நிகழ்வில் கலந்துகொண்டால் காங்கிரஸ் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு வரக்கூடும். மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்ட பிறகே, கருத்தரங்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது” என்றார்.
இருப்பினும், செய்தியாளர்களிடையே பேசிய தரூர், “தடை விதிக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது. கட்சியில் இருந்து அப்படியொரு உத்தரவு வந்தால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கலந்தாலோசித்து கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சிபிஐ(எம்) கட்சி மாநாடு ஒரு தேசிய கூட்டம், அரசியல் உரையாடல்களில் ஈடுபடுவதில் தவறில்லை. இப்பிரச்சினை கட்சிக்குள் பேசி தீர்வு காணப்படும்” என்றார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் தாமஸ், கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், “இந்த தடை காங்கிரஸின் அரசியல் ஏழ்மைத்தன்மையை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.