கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 27 வயதான பெண்ணை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். 4வருடங்களாக காவல்துறை கண்ணில் சிக்காமல் போக்குகாட்டி வந்த நித்தி என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2015ம் ஆண்டு சாகர் என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் நித்தி காவல்துறையினர் தேடி வந்தனர். 2018ம் ஆண்டு ஜாமீன் கிடைத்தபிறகு, அந்த பெண் மாயமானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. இந்நிலையில், காவல்துறைக்கு மர்ம நபர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், உத்தரபிரதேசம் காஜியாபாத் அருகே அந்த பெண்ணை கைது செய்ததாக காவல்துறை துணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) ஜஸ்மீத் சிங் தெரிவித்தார்.
நிதி மற்றும் அவரது கணவர் ராகுல் ஜாத் உட்பட 9 பேர், ஏப்ரல் 1, 2015 அன்று சாகரை டெல்லியில் உள்ள ஜிடிபி என்கிளேவ் பகுதியில் இருந்து கடத்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் அவரை லாரியில் வெட்டிக் கொன்றதாக காவல்துறை தெரிவித்தது. நித்தியின் தங்கையை சாகர் தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், அவரை கொன்றதாக கைதானவர்கள் தெரிவித்திருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM