உங்களின் நினைவுத்திறன் எத்தனை வருடங்களுக்கு இருக்கும்? நம்முடைய நினைவுகளும் அனுபவங்களும்தான் நாம் இன்றைக்கு யாராக இருக்கிறோம் என்பதை முடிவு செய்கிறது. சில நேரங்களில் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் கடந்த காலம் பல நேரங்களில் துயரமான சம்பவங்களில் நம்மை ஆழ்த்திவிடும். அப்படியான நினைவுகளை மறக்க இன்னமும் போராடிக்கொண்டிருப்போம். மறதி வரம் என வாதிடுபவர்களும் உண்டு. சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ நம்மை நெகிழச் செய்கிறது.
ஒரு வீட்டின் முன் வயதான பெரியவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் தினமும் அதுபோல அமர்வது வழக்கம். சில நொடிகளில் பள்ளி பேருந்து வந்து நிற்கிறது. பள்ளியில் களைப்போடு இறங்கும் குழந்தைகள்போல் இல்லாமல் இங்கு பள்ளிப் பேருந்தில் இருந்து குழந்தைகள் உற்சாகமாக இறங்கி ஓடி வருகின்றனர். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தாத்தாவைச் சுற்றி இனிப்புக்குக் கூடும் எறும்புகளாகக் குழந்தைகள் கூட்டம்.
அவர் சந்தோஷமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு வாண்டு பையன் fancy dress போட்டியில் இருந்து அப்படியே ஓடி வந்தது போல தாத்தாவிற்கு அருகில் செல்கிறான்.இப்படியாக அந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்தப் பெரியவரின் பெயர் Gene. அவருக்கு 15 நிமிடங்கள் மட்டுமே நினைவுத்திறன் இருக்கும். அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியாது. ஆனாலும் ஏதோவொன்று அவரை குழந்தைகள் வருகிற நேரத்திற்கு வெளியே வந்து அமரச் சொல்கிறது. ஒவ்வொரு முறையும் அன்றைக்கு தான் முதல் முறை என்பது போலவே அந்தக் குழந்தைகளைப் பார்க்கிறார். இது இன்றைக்கு நேற்றைக்கு என்றில்லை கிட்டத்தட்ட 2 வருடங்களாக, குழந்தைகள் வருவதும் தாத்தாவைப் பார்ப்பதும் தொடர்கிறது. இந்த உலகம் இருள் மிகுந்தது என நாம் நினைக்கிறோமோ அந்தளவிற்கு வெளிச்சமும் நிரம்பியது!