அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ததற்கு பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கடுமையாக விமர்சிப்பவர். ஆனால் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு பொது பேரணியில், “சுதந்திர வெளியுறவுக் கொள்கையை” பின்பற்றுவதற்காக அண்டை நாடான இந்தியாவைப் பாராட்ட விரும்புகிறேன் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.
குவாட் நாடுகளின் (Quad) ஒரு பகுதியாக இருக்கும் இந்தியா, அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. அதேபோல, தனது வெளியுறவுக் கொள்கையும் பாகிஸ்தான் மக்களுக்கு சாதகமாக இருக்கும்.
“நான் யாருக்கும் முன்னால் தலைவணங்கவில்லை, என் தேசத்தையும் தலைவணங்க விடமாட்டேன்” என்று பாராளுமன்றத்தில் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக மக்கள் ஆதரவைத் திரட்டி வரும் கான் இவ்வாறு பேசினார்.
பொது பேரணிகளில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சிக்கலான விஷயங்களை வெளிப்படையாக விவாதிக்காத பாரம்பரியத்தை உடைத்த கான், ரஷ்யா-உக்ரைன் மோதலில் ரஷ்யாவிற்கு எதிராக பாகிஸ்தானின் ஆதரவைக் கோரும் ஐரோப்பிய ஒன்றிய தூதர்களிடம் “கண்டிப்பாக முடியாது” என்று கூறியதாக கான் குறிப்பிட்டார். ஏனெனில் “அவர்கள் கோரிக்கை விடுத்ததன் மூலம் நெறிமுறையை மீறினார்கள்”.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு இணங்குவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைத்திருக்காது.
“நாங்கள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரின் ஒரு பகுதியாக மாறி 80,000 மக்களையும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் இழந்தோம்,” என்று அவர் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டைக் பாகிஸ்தான் கண்டிக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு எதிராக அவர் இரண்டாவது முறையாகப் பேசினார். தனது முந்தைய உரையில், கான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இதேபோன்ற கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். (பிடிஐ)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“