பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் 137வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
பட்ஜெட் மீதான விவாதம்
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது.
நம்ம ஊரு திருவிழா
சென்னை, தீவுத்திடலில் இன்று மாலை 6 மணி முதல் ‘நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.
பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்ற டிஜிபி சைலேந்திர பாபு, செல்லும் வழியில் உள்ள உச்சிபுளி C7-காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோப்புகள் அனைத்தும் சரியாக இருந்ததை அடுத்து, காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுத்தொகையினை அவர் வழங்கினார்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் ‘அசானி’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
India update: மணிப்பூர் முதல்வராக பைரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அகதிகளாக 1 கோடி உக்ரேனியர்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அந்நாட்டில் இருந்து 1 கோடி பேர் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது குறித்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. காவிரி விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என முதல்வராக இருந்தபோது பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது அணையால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்– ஈபிஎஸ்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது குறித்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இதுகுறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
”மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன். கடந்த 2014 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா உடல்நல குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார்”-ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது – அமைச்சர் துரைமுருகன்
சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளனர். காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது – துரைமுருகன்
பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்புகள் கட்டப்படுமா? என எம்.எல்.ஏ சேகர் எழுப்பிய கேள்விக்கு, பெரம்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஓபிஎஸ், இளவரசி நேரில் ஆஜர் ஆகினர்.
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க விசிக எம்.பி. திருமாவளவன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
அரசு சார்பில் 10 கல்லூரிகள், அறநிலைய துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவு துறை சார்பில் ஒரு கல்லூரி துவங்கப்பட உள்ளன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
திருப்பூரில் 3 முழு நேர கடைகள், 7 பகுதிநேர கடைகள் திமுக ஆட்சியமைத்த பின் தொடக்கம். அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33,245 பேருக்கு பயன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது; சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.
பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடத்துவதற்கான கூட்டத் தொடர் சட்டசபையில் தொடங்கியது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்தவிருந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு சிலையை அதிகாரிகள் மீட்டனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூச்சி முருகன்.
சென்னை, கிண்டியில் 1,000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ₨250 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டடம் அமையவுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
கோவிஷீல்டு தடுப்பூசியின் 2ஆவது டோஸுக்கான கால இடைவெளியை குறைக்க நோய் தடுப்பு தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு அறிவுறுத்தியுள்ளது.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.