மதுரையில் தமிழக அரசின் மஞ்சள் பை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சள் பை மனிதன் வேடமிட்ட இளைஞர் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் கடல் வாழ் உயிரினங்கள், உள்பட சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஆனாலும் பல கடைகளில் இன்னும் பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் முதல்வரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மக்கள் மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்த வலியுறுத்தியும் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில், பிரமாண்ட மஞ்சள் பையை உடலில் மாட்டிக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள், அப்போது பிளாஸ்டிக்கின் தீமைகளை கருதி பிளாஸ்டிக்கை ஒழிக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக மக்கள் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என இவ்வியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM