இயக்குநர் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’ படத்திற்கான டெஸ்ட் ஷூட், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு நாள் ஷூட் ஆக நேற்று தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பில் நடந்தது என்ன? யாரெல்லாம் பங்கேற்றனர் என்பதைப் பார்ப்போம்.
கலைப்பு எஸ்.தாணுவின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் `வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’தான், படமாகிறது. அந்த நூலின் முன்னுரையில் கூட சிசு செல்லப்பா, ‘ஒத்தகைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும், மனுஷனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல்’ என ஜல்லிக்கட்டின் சாகசத்தைச் சொல்லியிருப்பார். ஒரு வாழ்வியலை சொல்லும் படைப்பான இது, இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
நேற்று நடந்த டெஸ்ட் ஷூட்டில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலை செட் போட்டிருந்தனர். கடந்த ஆண்டு இந்த படத்தின் வேலைகள் பேச்சு எழும் போதே, படத்திற்காக ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வெற்றிமாறான் வாங்கி வந்திருந்தார். அதை சூர்யாவின் தன் வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று நடந்த ஷூட்டில் தென் தமிழகத்தில் இருந்து ஓங்குதாங்கான 60 ஜல்லிக்கட்டுக் காளைகளும், மாடுபிடிவீரர்களும் கலந்துகொண்டனர். வாடிவாசல் திறந்ததும் சீறிவரும் காளைகளை சூர்யா அடக்குவதுபோல படமாக்கி வருகின்றனர். மதுரை மாவட்டம் முதலைக்குளம் கீழப்பட்டி கிராம பொதுமக்கள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடப்பதுபோல படமாக்கி வருகின்றனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். படப்பிடிப்பை காண, நடிகர் சூரியும், ஜி.வி.பிரகாஷும் வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த படத்தில் உதவி இயக்குநராக நடிகர் கருணாஸ் தன் பணியைத் தொடங்கியிருக்கிறார். இந்த ஷூட் சென்னையில் சரியாக வந்துவிட்டால், மொத்த படத்தையும் இங்கேயே செட் போட்டு எடுக்கும் திட்டத்தில்தான் டெஸ்ட் ஷூட்டை இங்கு வைத்துள்ளனர். இன்றுடன் டெஸ்ட் ஷூட் முடிவடைகிறது. இன்றும் சூர்யா ஸ்பாட்டில் இருக்கிறார். வெற்றிமாறன் இப்போது சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் `விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்த பிறகே ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட் தொடங்கும் என்கிறார்கள்.