பெங்களூரு: ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் பெங்களூரு வந்தடைந்தது. அவரது உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டபோது இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். அவரது உடலை தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இரு நாட்டுக்கு இடையிலான போர் தொடர்ந்து வருவதால் உடலை கொண்டுவர சிரமம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் முயற்சியோடு மாணவர் நவீனின் உடல் இன்று (மார்ச் 21) காலையில் பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவரின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் ஹவேரியில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நவீனின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படவுள்ளது.
Advertisement