மேற்கு வங்காள நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் என்னை
வெளியாள்
, வந்தேறி என்று பாஜகவினர் விமர்சிக்கின்றனர். அப்படியானால் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி யார் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் நடிகர்
சத்ருகன் சின்ஹா
.
ஆரம்பத்தில் பாஜக அனுதாபியாக இருந்தவர் சத்ருகன் சின்ஹா. பின்னர் காங்கிரஸ் பக்கம் போனார். இப்போது
திரினமூல் காங்கிரஸ்
கட்சியில் இணைந்துள்ளார். அவரை கட்சியில் இணைக்க பிரஷாந்த் கிஷோரின் முயற்சிகளே முக்கியக் காரணம். மமதா பானர்ஜியும், சத்ருகன் சின்ஹாவை சேர்க்க ஆர்வம் காட்டி வந்தார்.
கட்சியில் இணைந்ததுமே அவருக்கு மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் மமதா பானர்ஜி. அங்கு பாஜக சார்பில் அக்னிமித்ரா பால் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தன்னை வெளியாள் என்று கூறி பாஜகவினர் பிரசாரம் செய்வது குறித்து சத்ருகன் சின்ஹா பதிலளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை இந்த விவாகரத்தில் விமர்சித்து அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சத்ருகன் சின்ஹா பேசுகையில், அசன்சோல் வாக்காளர்கள் மமதா பானர்ஜியின் வளர்ச்சி அரசியலுக்காக வாக்களிப்பார்கள். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் மமதா பானர்ஜி.
பிரதமர் பதவியில் இருக்கும் நரேந்திர மோடி போன்றவர்கள் லோக்சபா தேர்தலில் நாட்டின் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியும் என்றால் அதே அளவுகோல் அனைவருக்கும் பொருந்தும். அதே அளவுகோல் எனக்கும் பொருந்தும். நான் அசன்சோலில் போட்டியிடும்போது வெளியால் என்று விமர்சிக்கும் நீங்கள், பிரதமர் வாரணாசியில் போட்டியிடும்போது எப்படி விமர்சனம் செய்வீர்கள்.
அசன்சோல் மக்கள் என் மீது மிகுந்த பாசமாக உள்ளனர். விமான நிலையத்துக்கு நான் வந்தபோது அவர்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் அவர்களது வரவேற்பிலிருந்தே தெரிந்து கொண்டேன். அசன்சோல் மக்களால் பாஜக வீழ்த்தப்படும். நீதிக்காக ஓட்டளிக்கக் கூடியவர்கள் அசன்சோல் மக்கள் என்றார் சத்ருகன் சின்ஹா.
அசன்சோல் மட்டுமல்லாமல், பாலிகஞ்ச் சட்டசபைத் தொகுதிக்கும் சேர்த்து ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் திரினமூல் காங்கிரஸே வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் தனது இருப்பை வலுவாக்கும் முயற்சிகளில் மமதா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக பிரஷாந்த் கிஷோர் வழிகாட்டுதலில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். கோவா சட்டசபைத் தேர்தலிலும் இதே கணக்குடன்தான் அவர் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவரது உத்திகள் பலிக்கவில்லை. அதேசமயம், தேசிய அளவில் தெரிந்த முகங்களை கட்சியில் இணைக்கும் யோசனையை பிரஷாந்த் கிஷோர் கொடுத்ததன் பேரில் தற்போது சத்ருகன் சின்ஹாவை கட்சியில் இணைத்துள்ளார்.