'வலிமை' பட பாணியில் பைக் வீலிங்: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சென்னையில் ‘வலிமை’ பட பாணியில் வாட்ஸ் அப் குழு அமைத்து பைக் வீலிங்கில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் கடந்த 18 ஆம் தேதி 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து இணை ஆணையர் ஓம் பிரகாஷ் மீனா ஆலோசனையின் படி மெரினா, பூக்கடை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சாஸ்திரி நகர், அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட காவல் நிலைய போலீசார் பைக் சாகச கும்பலை பிடிக்க விசாரணை நடத்தினர்.
image
அதில், பைக்கில் அதிவேகமாக செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர், இருசக்கர வாகன பதிவு எண்களை வைத்து பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (20), ரோமன்ஸ் அல்கிரேட் (24), ஹரிகரன் (21) ஆகிய 3 பேரை மெரினா போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 308 – கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் மற்றும் மோட்டார் வாகன சட்டப்பிரிவான 189-அதிவேகமாக வாகத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
image
இதே போல நேற்றிரவு மயிலாப்பூர் ஆர்கே சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற 14 கல்லூரி மாணவர்களை ராயப்பேட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணைக்கு பிறகு 14 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பூக்கடை மற்றும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய பகுதியிலும் சில பேரை பிடித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மெரினாவில் கைது செய்யப்பட்டுள்ள 3 இளைஞர்களிடம்; போலீசார் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது.
சென்னை முழுவதும் குழு குழுவாக பிரிந்து மெரினா கடற்கரை மற்றும் ஈசிஆர் சாலையில் வீலிங் செய்து வருவதாகவும், வீலிங் செய்வதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் லைக்காக பதிவிடுவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக மெரீனா போலீசார் தெரிவித்துள்ளனர்.
image
மேலும் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதே போன்று பைக் வீலிங்கில் ஈடுபடுவதாகவும், ஈசிஆர், ஓஎம்ஆர், மெரினா போன்ற பிரதான சாலைகளில் எந்த நேரங்களில் சாகச பயிற்சியில் ஈடுபட வேண்டும் என வாட்ஸ் குழு மூலமாக பகிர்ந்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் லைக்குக்காக மட்டுமே பைக் வீலிங்கில் ஈடுபடுவதாகவும் பந்தயங்களில் இந்த கும்பல் ஈடுபடவில்லை எனவும் மெரீனா போலீசார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் பைக் வீலிங்கில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப் குழு மூலமாக இந்த நெட்வொர்க்கை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.