இந்திய ராணுவத்தில் சேரும் கனவுடன் நள்ளிரவில் ஓடும் வாலிபர்… சமூகலைத்தளத்தில் வைரலான வீடியோ…

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை பார்க்கும் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது வாலிபர் தினமும் இரவு நேரங்களில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திரைத்துறையைச் சேர்ந்த வினோத் கப்ரி கடந்த சனிக்கிழமை இரவு நொய்டா சாலையில் சென்று கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் தனது முதுகில் ஒரு பையுடன் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தார்.

இரவு நேரத்தில் ஒருவர் ஓடிச்செல்வதை பார்த்து ஏதாவது விபரீதமாக இருக்குமோ என்று நினைத்து தனது காரை அந்த வாலிபர் அருகில் சென்ற வினோத் கப்ரி, தன்னுடன் காரில் வருமாறு அழைத்தும் அந்த வாலிபர் மறுத்துவிட்டார்.

பின்பு ஏன் ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “இது நான் வழக்கமாக இரவு வேலை முடித்து வீடு திரும்பும் போது செய்வது தான்” என்று கூறியுள்ளார்.

அவரைப் பற்றி விசாரித்ததில், அவர் பெயர் பிரதீப் மெஹ்ரா என்பதும் அவர் உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தனது சகோதரருடன் நொய்டாவில் தங்கி வேலைபார்த்து வருவதாகவும் தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து தனது வீட்டுக்கு தினமும் இரவில் ஓடி வருவது தனது வழக்கம் என்றும் கூறினார்.

எதற்காக இப்படி தினமும் ஓடவேண்டும் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் தான் இவர் சமூக வலைதளத்தில் வைரலாக காரணமாக இருந்தது.

“இந்திய ராணுவத்தில் சேருவதே எனது லட்சியம் அதனால் தினமும் ஓட்ட பயிற்சி மேற்கொள்வதுடன், எனது உடலையும் அதற்காக தயார்படுத்தி வருகிறேன்” என்று கூறி ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

தொடர்ந்து அவரை காரில் ஏற வற்புறுத்திய போது, இன்று ஒரு நாள் எனது பயிற்சியை நிறுத்தினால், பின் தினமும் அதுவே பழக்கமாகிவிடும் என்று கூறி ஏற மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை தனது கேமராவில் படம் பிடித்த வினோத் கப்ரி இதனை தனது ட்விட்டரில் பதிவேற்றினார், இது வைரலானதில் தற்போது வரை 7.4 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.